திண்டுக்கல் மாவட்டத்தில் 30 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 30 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Update: 2021-08-03 16:26 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 30 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 2-வது கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
அதன்பின்னர் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கிடையே அடுத்த மாதம் (செப்டம்பர்) ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக இருக்கும் உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
30 பதவிகளுக்கு இடைத்தேர்தல் 
இதற்காக மாநிலம் முழுவதும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி பதவிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஊராட்சி தலைவர்கள், 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 ஊராட்சி துணை தலைவர்கள் (மறைமுக தேர்தல்) என மொத்தம் 30 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 1½ ஆண்டுகளில் இறப்பு மற்றும் ராஜினாமா காரணமாக 30 பதவிகள் காலியாக இருக்கின்றன. எனவே 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் போது, திண்டுக்கல் மாவட்டத்தில் 30 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்