திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவக்குழு அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவக்குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
முருகபவனம்:
திண்டுக்கல்லை அடுத்த ஒடுக்கத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.327 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர திண்டுக்கல் அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அங்கும் பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டிட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு துரிதமாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தகுதி மற்றும் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறதா? என்பது குறித்து கடந்த மாதம் மாநில அளவிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்தநிலையில் அகமதாபாத்தை சேர்ந்த தேசிய மருத்துவக்குழு அதிகாரிகள் ஜெயஸ்ரீ, ஜிக்னா தேவ் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், முதலில் ஒடுக்கத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியின் கட்டிட பணியை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வை தொடர்ந்தனர். அப்போது அங்குள்ள அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகம், உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு என அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரின் சான்றிதழ்களை சரி பார்த்தனர். 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) ஆய்வு தொடரும் என்றும், இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் தேசிய மருத்துவ குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமார், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அதிகாரி சந்தனகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.