திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
தளி,:
கொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அமணலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலில் மகாசிவராத்திரி, அமாவாசை, பிரதோஷம், கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
அதுதவிர அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து மகிழவும், மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும், அணைப்பகுதி, பூங்கா, நீச்சல்குளம், வண்ணமீன்காட்சியகம், படகு இல்லம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கிறார்கள்.
ஆடிப்பெருக்கு
கொரோனா வருகைக்கு முன்பு ஆடிப்பெருக்கு தினத்தன்று திருமூர்த்திமலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழா நடத்தப்பட்டு வந்தது. அப்போது தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
அது தவிர சிலம்பாட்டம், கரகாட்டம், தேவராட்டம், ஆடல்பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும். விழாவின் முடிவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இதனால் திருமூர்த்திமலைபகுதி விழாக்கோலமாக காட்சியளிக்கும்.
தடை
ஆனால் கொரோனா வருகைக்கு பின்பு நிலைமை தலைகீழாக மாறிப்போனது. கடந்த 2 வருடங்களாக ஆடிப்பெருக்கு விழா நடைபெறவில்லை. கொரோனா 2-வது அலையின் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல பொருளாதாரமும், இயல்பு வாழ்க்கையும் மீண்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடிப்பெருக்கு மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
அதைத்தொடர்ந்து உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் மேற்பார்வையில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் உள்ளிட்ட போலீசார் நேற்று திருமூர்த்திமலைக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக ரெட்டிபட்டி மற்றும் மொடகுப்பட்டிபிரிவு, சாம்பல்மேடு, காண்டூர் கால்வாய் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.அங்கு போலீசார் பணியில் ஈடுபட்டுனர்.இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் தடுப்புகளை தாண்டி முன்னேறிச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆனால் ஒருசிலர் வேறு வழிகளில் சென்று திருமூர்த்திமலையை அடைய முயற்சித்தனர்.
வெறிச்சோடிய கோவில்
இறுதியில் காண்டூர் கால்வாய் அருகே போலீசாரின் தடுப்பை தாண்டி செல்ல முடியவில்லை. அதைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் கோவில் வளாகம் அணைப்பகுதி பக்தர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோன்று வருகின்ற அமாவாசையன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதன்படி வருகிற 7-ந்தேதி மற்றும் 8-ந்தேதி ஆகிய நாட்களில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மாட்டுவண்டி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு வருவதை தவிர்த்து நோய்தொற்றை தடுத்திட ஒத்துழைப்பு அளிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.