அரூர் அருகே டி.அம்மாபேட்டையில் சென்னியம்மன் கோவிலில் தடையை மீறி குவிந்த பக்தர்கள் ஆடு கோழிகள் பலியிட்டு வழிபாடு

அரூர் அருகே டி.அம்மாபேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலில் தடையை மீறி பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ஆடு கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்.

Update: 2021-08-03 15:06 GMT
அரூர்:
அரூர் அருகே டி.அம்மாபேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலில் தடையை மீறி பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கு விழா
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே டி.அம்மாபேட்டையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக ஆடிப்பெருக்கு அன்று பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி, பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க சென்னியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இருந்தபோதிலும், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பக்தர்கள் சென்னியம்மன் கோவிலில் குவிந்தனர். 
நேர்த்திக்கடன்
அவர்கள் தென்பெண்ணை ஆற்றில் உள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டும், மாலை அணிவித்தும், பொரி தூவி, பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் அவர்கள் ஆடு, கோழிகளை  பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் ஆங்காங்கே சமைத்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு பரிமாறினர். தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து இல்லாததால், விழாவிற்கு வந்த பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்