சாலை மறியல் செய்த 11 பேர் மீது வழக்கு
சாலை மறியல் செய்த 11 பேர் மீது வழக்கு;
துடியலூர்
கோவையை அடுத்த துடியலூர் அருகே பழனிக்கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இது குறித்து துடியலூர் போலீசாருக்கு, அகில பாரத இந்து மகா சபா மாவட்ட இளைஞரணி தலைவர் பார்த்திபன் தகவல் கொடுக்க முயன்றார்.
ஆனால் துடியலூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்து போனை துண்டித்து விட்டனர்.இதனால் பார்த்திபன் தலைமையில் 25 பேர் மேட்டுப்பாளையம் ரோடு வடமதுரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை அறிந்த துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து குருடம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிர்த்திகா கொடுத்த புகாரின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பார்த்திபன் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.