காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு; கலெக்டர் பங்கேற்பு
கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் கலெக்டர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 31-ந் தேதியன்று கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொரோனா விழிப்புணர்வு மாபெரும் கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு, பொதுமக்களுக்கு முக கவசங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் கபசுர குடிநீரும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழிப்புணர்வு அறிவுரைகள்
அதன் பின்னர் அவர் பொதுமக்களுக்கு கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்தல், போன்ற அரசு அறிவித்த கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.