குட்கா பொருட்கள் விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
குட்கா பொருட்கள் விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
குட்கா பொருட்கள் விற்ற 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் கண்காணிப்பு
சேலம் செவ்வாய்பேட்டை சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து கடந்த வாரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு நின்ற 17 வயது சிறுவனிடம் விசாரித்தபோது, அவனிடம் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சேதுராமன் (வயது 49) என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததும், செவ்வாய்பேட்டை பஜாரில் கடை வைத்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கார்த்தி, அர்ஜூன் சிங், குந்தன் சிங், மனோகர் சிங் ஆகியோர் சுரேஷ்குமாருடன் இணைந்து குட்கா பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குண்டர் சட்டத்தில் கைது
மேலும் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சேதுராமன், சுரேஷ்குமார் (30), கார்த்தி (29), அர்ஜூன் சிங் (23) ஆகிய 4 பேரும், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனருக்கு செவ்வாய்பேட்டை போலீசார் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.