சேலம் அருகே பம்பரம் விளையாடிய சிறுவனை தாக்கிய தொழிலாளிக்கு கத்திக்குத்து-போலீசுக்கு பயந்து தானும் தாக்கப்பட்டதாக நாடகமாடியது அம்பலம்
சேலம் அருகே பம்பரம் விளையாடிய சிறுவனை தாக்கிய தொழிலாளியை வியாபாரி கத்தியால் குத்தியதாக தெரிகிறது. போலீசுக்கு பயந்து மண்டையை உடைக்க மனைவியிடம் சொல்லி நாடகமாடியது அம்பலமானது.
சேலம்:
சேலம் அருகே பம்பரம் விளையாடிய சிறுவனை தாக்கிய தொழிலாளியை வியாபாரி கத்தியால் குத்தியதாக தெரிகிறது. போலீசுக்கு பயந்து மண்டையை உடைக்க மனைவியிடம் சொல்லி நாடகமாடியது அம்பலமானது.
தொழிலாளிக்கு கத்திக்குத்து
சேலம் அருகே வலசையூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரவி (வயது 29). இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவருடைய மகன் 10 வயது சிறுவன் நேற்று முன்தினம் அதே பகுதியில் பம்பரம் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரியான முருகன் (57) மீது பம்பரம் பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் சிறுவனின் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தான். ரவி தனது மனைவியுடன் சென்று எங்கள் மகனை ஏன்? அடித்தாய் என்று முருகனிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை குத்தியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இதனிடையே வியாபாரி முருகனும் தலையில் பலத்த காயங்களுடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வீராணம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரவி தன்னை கட்டையால் தாக்கியதாகவும், தலையில் பலத்த காயம் அடைந்து விட்டதாகவும் முருகன் போலீசாரிடம் கூறினார்.
முருகனின் பதிலில் திருப்தி அளிக்காத போலீசார், சம்பவ நடந்த பகுதியில் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரவிக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த முருகன், ரவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் கீழே விழுந்த ரவிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைக்கண்ட முருகன், ரவி இறந்து விட்டதாக கருதி வீட்டுக்குள் ஓடினார்.
நாடகமாடியது அம்பலம்
அங்கு ரவி இறந்து விட்டார் என நினைக்கிறேன். நீ உருட்டுக்கட்டையால் என்னை தாக்கு. நானும் காயம் அடைந்ததாக போலீசாரை நம்ப வைத்து விடலாம் என கூறியுள்ளார். அதன்படி அவருடைய மனைவி உருட்டுக்கட்டையால் முருகனை தாக்கியது தெரிய வந்தது. போலீசுக்கு பயந்து முருகன் இந்த நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் அம்பலமானது.
இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.