கோஷ்டி மோதலால் பிரச்சினை: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற திருநங்கைகள்- ரவுண்டானாவில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கோஷ்டி மோதலால் நடந்த பிரச்சினையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தீக்குளிக்க முயன்றனர். மேலும் அவர்கள் ரவுண்டானாவில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-02 22:24 GMT
சேலம்:
கோஷ்டி மோதலால் நடந்த பிரச்சினையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தீக்குளிக்க முயன்றனர். மேலும் அவர்கள் ரவுண்டானாவில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை திருநங்கை சஞ்சனா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வந்தனர். அவர்கள் திடீரென்று எங்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள். இல்லை என்றால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூச்சலிட்டவாறு தங்கள் பையில் மறைத்து வைத்திருந்த  கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், திருநங்கைகளிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கிக் கொண்டனர். பின்னர் திருநங்கைகள் மீது தண்ணீரை ஊற்றியதுடன் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சாலைமறியல்
சில திருநங்கைகள் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி கலெக்டர் அலுவலகம் முன்புள்ள ரவுண்டானாவில் திடீரென படுத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடத்தில் திருநங்கைகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
சாலையின் 4 புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படி இருந்தும் திருநங்கைகள் சமாதானம் அடையாமல், சாலையில் மீண்டும், மீண்டும் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
2 பேர் மயக்கம்
அப்போது மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் 2 பேர் திடீரென மயக்கம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்தது. அவர்கள் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்தார். 
சில திருநங்கைகள் அவரது காலில் விழுந்து எங்களை காப்பாற்றுங்கள் என்றுக்கூறி கதறி அழுதனர். திருநங்கைகளிடம், உங்களது கோரிக்கையை கூறுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கமிஷனர் உறுதி அளித்தார். அதன்பிறகு திருநங்கைகள் போராட்டத்தை கைவிட்டு சமாதானம் அடைந்தனர். திருநங்கைகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கோஷ்டி மோதலால் பிரச்சினை
இந்த பிரச்சினை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், புதிய பஸ் நிலையம் பகுதியில் பணம் வசூலிப்பது தொடர்பாக திருநங்கைகள் இரு கோஷ்டியாக அடிக்கடி மோதி வருகின்றனர். 
அப்போது பிரின்சி என்ற திருநங்கையை பணம் கேட்டு ஒரு தரப்பினர் தாக்கி உள்ளனர். அப்போது தாக்கியவர்களை போலீசார் விசாரிக்காமல் பிரின்சி தரப்பை விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. 
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் பகுதி சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்