ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
ஈரோடு
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
தீக்குளிக்க முயற்சி
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 51). இவர் நேற்று மதியம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திறந்து திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லலிதாவிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, அவர் மேல் தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
என்னுடைய கணவர் பெயர் ராஜா. எனது கணவரும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதற்கிடையில் உடல்நிலை காரணமாக எனது கணவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
விசாரணை
இந்தநிலையில் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினர்.
இதுகுறித்து அந்த பெண்ணிடம் கூறினால் அவர் தனக்கு ஒன்றும் தெரியாது, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி வருகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நான் வாழ்வதைவிட சாகலாம் என்று முடிவு செய்து மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் லலிதாவை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.