அந்தியூர் அருகே கரும்பு, வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்- பொதுமக்கள் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு, வாழைகளை நாசப்படுத்திய ஒற்றை யானையை பொதுமக்கள் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.

Update: 2021-08-02 21:24 GMT
அந்தியூர்
அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு, வாழைகளை நாசப்படுத்திய ஒற்றை யானையை பொதுமக்கள் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.
ரோட்டுக்கு வந்த யானை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கடி அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதிக்கு வந்து செல்லும். அதேபோல் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம், கூட்டமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்தன. பின்னர் யானைகள் அணையில் தாகம் தீர தண்ணீர் குடித்தன.
அதன்பின்னர் மற்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. அதில் ஒற்றை யானை மட்டும் காட்டுக்குள் செல்லவில்லை. அங்கிருந்து அருகே உள்ள அந்தியூர்-மைசூரு ரோட்டுக்கு வந்தது. சிறிது நேரம் ரோட்டில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.
தோட்டத்துக்குள் புகுந்தது
இதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் யானை அருகே உள்ள நல்லாகவுண்டன் கிராமத்துக்குள் சென்றது. பின்னர் அங்குள்ள சதாசிவம் என்பவரது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. அதைத்தொடர்ந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்த தொடங்கியது.
யானையின் சத்தம் கேட்டு அருகே உள்ள தோட்டத்து வீட்டில் இருந்த சதாசிவம் ஓடிவந்து பார்த்தார். பின்னர் இதுபற்றி அக்கம்பக்கத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு சென்று யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த யானை அவர்களை துரத்த தொடங்கியது. இதில் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கரும்புகள், வாழைகள் நாசம்
அதைத்தொடர்ந்து யானை அருகே உள்ள சதாசிவத்தின் வாழை தோட்டத்துக்குள் புகுந்தன. அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை குருத்துகளை தின்றும், மரங்களை மிதித்தும் நாசப்படுத்த தொடங்கின.
அதன்பின்னர் அங்கு வந்த பொதுமக்கள் சத்தம் போட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது. யானையால் 100-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்தன. மேலும் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் நாசமடைந்தன. மேலும் இதுகுறித்து அந்தியூர் வனத்துறைக்கும் விவசாயிகள் தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்