குமரியில் ரப்பர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
குமரியில் ரப்பர் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவட்டார்:
குமரியில் ரப்பர் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரப்பர் விவசாயம்
குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு மற்றும் தோவாளை தாலுகாவின் சில பகுதிகளில் ரப்பர் பெருமளவில் பயிரிடப்படுகிறது. இங்கு சுமார் 6,000 ஹெக்டர் பரப்பில் அரசு ரப்பர் தோட்டங்களும், 22,000 ஹெக்டர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களும் உள்ளன. குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ரப்பர் ஷீட்டுகளுக்கு உலக மார்க்கெட்டில் அதிக வரவேற்பு உள்ளது.
இங்கு ரப்பர் பால் வடிப்பு செய்தல், ரப்பர் நர்சரி, புகையறையில் ரப்பர் ஷீட் உலர்த்துதல், ரப்பர் ஷீட் வியாபாரம் என ஏராளமானோர் ரப்பரை நம்பியே உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரப்பர் ஷீட்டின் விலை கணிசமாக குறைந்து வந்தது. கடந்த ஆண்டு கிலோ ரூ.120 க்கும் கீழே சென்றது. இதனால், சிறு, குறு ரப்பர் விவசாயிகள் போதிய வருமானம் இல்லாமல் தவித்தனர்.
விலை உயர்கிறது
தற்போது ரப்பர் ஷீட்டின் விலை சற்று உயர்ந்து வருகிறது. தரமான ரப்பர் ஷீட் கிலோவுக்கு ரூ. 165 வரை விற்கப்படுகிறது. இதனால், ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து புத்தன்கடை மணக்குன்றை சேர்ந்த வின்சென்ட் கூறியதாவது:-
தற்போது விவசாய இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வேலைக்கூலி ஆகியன உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரப்பரின் விலை இறங்கு முகத்தில் சென்று கொண்டிருந்தது. தற்போது விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது. இதே நிலை நீடிக்குமானால்தான் ரப்பர் விவசாயிகள் நல்ல லாபம் பார்க்க முடியும் என்றார்.
இறக்குமதி குறைவு
கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் போர்டு உதவி வளர்ச்சி அலுவலர் முரளி கூறியதாவது:-
இந்தியாவில் ஆண்டுக்கு 8½ லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ரப்பரின் தேவை 12 லட்சம் டன் ஆகும். எனவே, வெளிநாட்டில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக ரப்பர் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரம் டயர் உள்ளிட்ட ஆட்டோமொபைல் பொருட்களின் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதனால், ரப்பரின் தேவை அதிகரித்து மார்க்கெட்டில் விலை அதிகரித்துள்ளது, என்றார்.