தென்காசி கடைகளில் உதவி கலெக்டர் அதிரடி சோதனை
தென்காசி கடைகளில் உதவி கலெக்டர் அதிரடி சோதனை நடத்தினார்.
தென்காசி:
தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன், தாசில்தார் சுப்பையன், தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் நேற்று தென்காசி கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். கீழ ரதவீதி, கூலக்கடை பஜார், சுவாமி சன்னதி பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது முககவசம் அணியாமல் சாலையில் வந்தவர்கள், கடைகளில் நின்றவர்கள், கடை பணியாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் கடைகளில் கூட்டமாக நின்றவர்கள், இதற்கு அனுமதித்த கடை உரிமையாளர்கள் போன்ற அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனை நடைபெற்ற 2 மணி நேரத்தில் ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை உதவி கலெக்டர் ராமச்சந்திரன் வழங்கினார்.