தோட்டத்தில் அட்டகாசம் செய்த கரடி, குட்டிகளுடன் கூண்டில் சிக்கியது

மேலசெவலில் தோட்டத்தில் அட்டகாசம் செய்த கரடி, அதன் குட்டிகளுடன் கூண்டில் சிக்கியது.

Update: 2021-08-02 21:03 GMT
களக்காடு:

நெல்லை அருகே மேல செவலில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்தது. அவைகள் அங்குள்ள மா, சப்போட்டா, கொய்யா மரங்களில் உள்ள பழங்களை பறித்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

இதுகுறித்து மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அதிகாரி கவுதம் மேற்பார்வையில், வனச்சரகர் கருத்தையா தலைமையில் வனத்துறையினர் அந்த தோட்டத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து கரடிகளை பிடிப்பதற்காக அங்கு கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று அந்த கூண்டில் வைக்கப்பட்டு இருந்த உணவுகளை சாப்பிடுவதற்காக ஒரு பெண் கரடி, 2 குட்டி கரடிகளுன் வந்தது. அப்போது அவை அந்த கூண்டில் சிக்கிக் கொண்டன. இதையடுத்து அந்த கரடிகளுக்கு கால்நடைத்துறையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவற்றை கூண்டுடன் வாகனத்தில் ஏற்றி, களக்காடு முதலிருப்பான் வனப்பகுதிக்கு கொண்டு சென்று திறந்து விட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான விக்கிரமசிங்கபுரம் அருகே கோட்டைவிளைபட்டி, பசுக்கிடைவிளை, அருணாசலபுரம், மணிநகரம், முதலியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கோட்டைவிளைபட்டி ராமர் கோவில் அருகில் உள்ள வீட்டு வளாகத்தில் புகுந்த கரடி, அங்குள்ள வாளியில் இருந்த சோறு வடித்த தண்ணீரை பருகிச் சென்றது.
\
இதனை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே அங்கு வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்