கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்கு அதிகாரிகளுக்கு, பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி உத்தரவு
பெங்களூருவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல்
பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் தலைமையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராகேஷ்சிங் பேசும்போது கூறியதாவது:-
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க அடிமட்டத்தில் ஊழியர்கள் சரியான முறையில் பணியாற்ற வேண்டியது அவசியம். மண்டல அதிகாரிகள் தங்களின் பகுதிகளில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைத்து மக்களும் பின்பற்றுவதை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் பிறகும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அத்தகையவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும். மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு ராகேஷ்சிங் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குப்தா பேசியதாவது:-
கேரளா, மராட்டியத்தில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் பெங்களூருவுக்கு வருகிறார்கள். இந்த 2 மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டியது கட்டாயம். இதற்காக முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை இந்த கொரோனா பரிசோதனை செய்யாதவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்படும். அதன் முடிவு வரை அரசு முகாமில் தனிமைபடுத்தப்படுவார்கள்.
இரவு நேர ஊரடங்கு
பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கை முழுமையான அளவில் அமல்படுத்த வேண்டும். இதை போலீஸ் அதிகாரிகள் கவனிக்க வேண்டும். நகரில் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், கோவில்கள், உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுகிறார்கள். அந்த இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.