உடுப்பி அருகே குளத்தில் தவறி விழுந்து தாய்-மகன் சாவு

உடுப்பி அருகே, குளத்தில் தவறி விழுந்து தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.;

Update: 2021-08-02 21:00 GMT
மங்களூரு: உடுப்பி அருகே, குளத்தில் தவறி விழுந்து தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது. 

பிணமாக மிதந்தனர்

உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா கெருவாஜே கிராமத்தை சேர்ந்தவர் சவுமியா(வயது 27). இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆரீஷ்(3) என்ற மகன் இருந்தான். சவுமியாவின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சவுமியா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் சவுமியா தையல் பயிற்சியும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தையல் வகுப்புக்கு ஆரீசை தூக்கி கொண்டு சவுமியா சென்றார். 

ஆனால் இரவு ஆகியும் அவர்கள் 2 பேரும் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுமியாவின் தங்கை சரிதா 2 பேரையும் தேடி சென்றார். அப்போது கெருவாஜே கிராமத்தில் உள்ள குளத்தில் சவுமியாவும், ஆரீசும் பிணமாக மிதந்தனர். 

தற்கொலையா?

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரிதா உடனடியாக அஜகாரு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் சவுமியா, ஆரீசின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சவுமியாவும், ஆரீசும் குளத்தில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

 இருப்பினும் மகனுடன் குளத்தில் குதித்து சவுமியா தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஜகாரு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்