திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 2 குழந்தைகளுடன் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு தம்பதி, 2 குழந்தைகளுடன் வந்தனர். மேலும் அவர்களின் கையில் ஒரு பையை வைத்து இருந்தனர். பின்னர் பையில் இருந்த பாட்டிலை வெளியே எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை 4 பேரும் தங்களுடைய உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அதை பார்த்ததும், அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் துரிதமாக செயல்பட்டு 4 பேரையும் தீக்குளிக்க விடாமல் தடுத்து மீட்டனர். பின்னர் 4 பேர் மீதும் போலீசார் தண்ணீரை ஊற்றினர். அதையடுத்து அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினர்.
கூலித்தொழிலாளி குடும்பம்
விசாரணையில் அவர்கள், வேடசந்தூர் தாலுகா கூவாக்காபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (வயது 40), அவருடைய மனைவி பத்மாதேவி (35), இவர்களின் மகள் கவுசல்யா (13), மகன் நகுல் (10) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம் முருகன் கூறுகையில், என்னுடைய வீட்டுக்கு வரும் பாதையை ஒருவர் தடுத்து வைத்துள்ளார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனது குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக விரக்தியில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி, அதிகாரிகளிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மண்எண்ணெய் பறிமுதல்
இதேபோல் கொடைக்கானல் தாலுகா கூக்கால் பழம்புத்தூரை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் சோதனை செய்து, அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தனது வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் மற்றும் பொருட்களை திருடி சென்றவர்களை கைது செய்யும்படி மனு கொடுக்க வந்ததாக முருகன் தெரிவித்தார்.
டீ வியாபாரி
இதேபோல் செம்பட்டி அருகேயுள்ள பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (30). டீ வியாபாரி. இவர் நேற்று மாலை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் திடீரென அவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து மீட்டனர். விசாரணையில் கூட்டுறவு வங்கியில் கடன் தர மறுத்ததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.