பெயிண்டர் கொலையில் சிறுவன் கைது; பரபரப்பு வாக்குமூலம்

கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-02 17:42 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெயிண்டர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் பொய்யாமொழி. இவருடைய மகன் மதன்குமார் (வயது 22). பெயிண்டரான இவர் கடந்த மாதம் 30-ந்தேதி காலையில் கோவில்பட்டி மந்திதோப்பு பாண்டவர்மங்கலம் குளத்தின் கரையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளியை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மதன்குமாருடன் பெயிண்டராக பணியாற்றிய 17 வயது சிறுவனே மதன்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கைதான சிறுவன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

காதல் விவகாரம்

நானும், மதன்குமாருடன் சேர்ந்து ஒன்றாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தோம். இதனால் நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். இந்த நிலையில் நான் காதலித்த பெண்ணையே மதன்குமாரும் காதலித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன்.
அதன்படி கடந்த 29-ந்தேதி இரவில் மதன்குமாரை மந்திதோப்பு பாண்டவர்மங்கலம் குளத்தின் கரையில் மது குடிக்க அழைத்து சென்றேன். அப்போது அங்கு முட்செடியில் ஏற்கனவே அரிவாளை மறைத்து  வைத்து     இருந்தேன். மதன்குமார் மது குடித்து போதையில் இருந்தபோது, அவரது கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தேன்.
பின்னர் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு, மதன்குமாரின் தந்தை பொய்யாமொழியுடன் சேர்ந்து மேற்கு போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றேன். அங்கு மயங்கி விழுந்த பொய்யாமொழிக்கு ஆறுதல் கூறி நாடகமாடினேன். எனினும் போலீசார் எனது செல்போனில் பதிவான அழைப்புகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்தனர்.
இவ்வாறு சிறுவன் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அரிவாள்

கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை சிறுவன், அங்குள்ள கண்மாயில் வீசி இருந்தான். அந்த அரிவாளை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் சிறுவனை போலீசார் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்தனர்.

மேலும் செய்திகள்