உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
முற்றுகை
வில்லிசேரி கிராம விவசாயிகள், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு பின், உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வில்லிசேரி கிராமத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையின் கீழ்ப்புறத்தில் 40 மீட்டர் அகலத்திற்கு நீரோடை உள்ளது. இதையொட்டி கத்தாழை ஓடையும் அமைந்துள்ளது. ஓடையை மூடி விட்டதால் 2 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை மறியல் போராட்டம்
நீர் வழிப்பாதையை மீட்டுக் கொடுக்க கோரி வரும் 5-ந் தேதி வில்லிசேரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் சங்கரநாராயணன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார்.