தினத்தந்தி செய்தி எதிரொலி ரெயில் நிலையத்தில் மீண்டும் தமிழில் முன்பதிவு சீட்டு

தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மீண்டும் தமிழில் முன்பதிவு சீட்டு வழங்கப்பட்டது.

Update: 2021-08-02 17:17 GMT
பொள்ளாச்சி

தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மீண்டும் தமிழில் முன்பதிவு சீட்டு வழங்கப்பட்டது.

‘தினத்தந்தி’ செய்தி

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கு வருகின்றனர். 

மேலும் டிக்கெட் ரத்து செய்வது, தட்கல் முறையில் விண்ணப்பிக்கின்றனர். இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கான விண்ணப்ப படிவம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வந்தது. 

இதன் காரணமாக பொதுமக்கள் விண்ணப்பத்தை எளிதில் பூர்த்தி செய்து வழங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் இல்லை என்று, தட்கல் முறைக்கு விண்ணப்பிக்கும் படிவத்தை வழங்கினர். 

அதில் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். 

இதுகுறித்து  ‘தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த நிலையில் நேற்று பாலக்காடு கோட்ட வணிக பிரிவு ரெயில்வே அதிகாரிகள் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது டிக்கெட் முன்பதிவு அலுவலகத்தில் தமிழில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை தொடர்ந்து வழங்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, ரெயில் நிலைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

 இதை தொடர்ந்து நேற்று முதல் தமிழில் அச்சடிப்பட்ட விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோட்டத்தை பிரிக்க வேண்டும்

தமிழக பகுதியான பொள்ளாச்சி ரெயில் நிலையம் கேரள மாநிலம் பாலக்காடு கோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

 கொரோனாவை காரணம் காட்டி பொள்ளாச்சி-கோவை, பொள்ளாச்சி வழியாக செல்லும் திருச்செந்தூர் ரெயில், கோவை-மதுரை ரெயில் நிறுத்தப்பட்டது. 

ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க பாலக்காடு கோட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும எடுக்கவில்லை.

இதற்கிடையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்ட முன்பதிவு சீட்டை வழங்கி உள்ளனர்.

 இதுகுறித்து‘தினத்தந்தி'யில் செய்தி வெளியான பிறகு,  தமிழில் அச்சடிக்கப்பட்ட முன்பதிவு சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பொள்ளாச்சியை பாலக்காடு கோட்டம் புறக்கணித்து வருகிறது. 

எனவே பாலக்காடு கோட்டத்தில் பிரித்து பொள்ளாச்சியை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்