தற்காலிக நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு

கொரோனா பணியில் ஈடுபட்ட தற்காலிக நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2021-08-02 17:15 GMT
தூத்துக்குடி:
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த தற்காலிக நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமை தோறும் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் பலர் தொடர்ந்து மனு கொடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். நேற்று பல்வேறு அமைப்பினர் மனு கொடுக்க வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த நர்சுகள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக நர்சாக நியமிக்கப்பட்டோம். முதல் அலை வந்தபோது 7 மாதமும், 2-வது அலை வந்த போது 2 மாதமும் பணியாற்றி உள்ளோம். தற்போது எங்களை பணியில் இருந்து நிறுத்தி உள்ளனர். இதனால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

மறுபரிசீலனை

தூத்துக்குடி மாவட்ட 115 சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் பண்ணையார் சமுதாயத்தைச் சேர்ந்த மயிலேறும் பெருமாள், சேகர், மறவர் சமுதாயம் கார்த்திக்ராஜா, யோகீஸ்வரர் சமுதாயம் கண்ணன், கேசவன், முத்தரையர் சமுதாயம் பரமசிவம், மருத்துவர் சமுதாயம் பரமசிவம், வண்ணார் சமுதாயம் சொக்கலிங்கம், பரதர் சமுதாயம் ரூஸ்வால்ட் உள்ளிட்டோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘கடந்த ஆட்சியில் எம்.பி.சி. பிரிவில் வழங்கப்பட்டு வந்த 20 சதவீத இட ஒதுக்கீடு, எந்த புள்ளிவிவரங்களும் இல்லாமலும், 115 சமுதாய மக்களை கலந்து பேசாமலும் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆகையால் பிற சமூகத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே 115 சமூகங்களின் கல்வி வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும் செயலை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்