புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

கூடலூர் அருகே கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்யும் புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-02 17:13 GMT
கூடலூர்,

கூடலூர் அருகே கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்யும் புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புலியை பிடிக்க கோரிக்கை

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி தேவன்-1 பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி நடமாட்டம் உள்ளது. மேலும் கால்நடைகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்கிறது. அங்கு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ஆனால் புலி நடமாட்டம் பதிவாகவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பிரதீஷ் என்பவரது பசுமாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் நேற்று பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். மேலும் கிராம மக்களுடன் இணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 

பேச்சுவார்த்தை

இதை அறிந்த தேவர்சோலை போலீசார் மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் கிராம மக்கள் தொடர்ந்து மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். 

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, வயதான புலி ஊருக்குள் முகாமிட்டு கால்நடைகளை கொன்று வருகிறது. இரை கிடைக்காத சமயத்தில் பொதுமக்களை தாக்கவும் வாய்ப்புள்ளது. எனவே கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும். அது வரை போராட்டம் தொடரும் என்றனர்.

மேலும் செய்திகள்