நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது நாைக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

Update: 2021-08-02 17:13 GMT
நாகப்பட்டினம்:
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது நாைக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்ைச பெற்று வருகிறார்.
இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 33), தீபன் ராஜ், சுரேந்திரன், ஜீவா, ராமச்சந்திரன், மோகன், முருகானந்தம், அரசமணி, ஆனந்த், சாமந்தான்பேட்டையை சேர்ந்த மாறன் ஆகிய 10 மீனவர்கள் கவுதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 28-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 
இவர்கள் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 42 நாட்டிக்கல் தூரத்தில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி அக்கரைப்பேட்டை மீனவர்களின் விசைப்படகை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி விடாமல் படகில் படுத்துக் கொண்டனர். 
மீனவர் படுகாயம்
இந்த துப்பாக்கி சூட்டில் விசைப்படகை ஓட்டி வந்த மீனவர் கலைச்செல்வன் தலையை ஒரு துப்பாக்கி குண்டு உரசியபடி சென்று படகை துளைத்தது. தலையில் துப்பாக்கி குண்டு உரசியதால் படுகாயம் அடைந்த கலைச்செல்வன் ரத்த வெள்ளத்தில் படகிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து சக மீனவர்கள் உடனடியாக கடலில் இருந்து படகை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்பினர். நேற்று அதிகாலை 4 மணியளவில் கரை திரும்பிய மீனவர்கள், துப்பாக்கி குண்டு உரசியதால் படுகாயம் அடைந்த கலைச்செல்வனை சிகிச்சைக்காக  நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆறுதல்
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைச்செல்வனை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில், துப்பாக்கி சூடு குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேபோல தி.மு.க. மாவட்ட செயலாளர் கவுதமன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன் மற்றும் தி.மு.க.வினர், கலைச்செல்வனை சந்தித்து ஆறுதல் கூறினர். 
தொடரும் அத்துமீறல்கள்...
இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது குறித்து இந்திய தேசிய மீனவர் சங்கதலைவர் ராஜேந்திர நாட்டார் கூறியதாவது:-
இலங்கை இனப்பிரச்சினை நடந்த 1983-ம் ஆண்டில் இருந்து போர் முடியும் வரை தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு துப்பாக்கி சூடு நடத்தி வந்தது. இதில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு விடுதலைப்புலிகள் என நினைத்து தமிழக மீனவர்களை தெரியாமல் சுட்டு விட்டோம் என இலங்கை அரசு தெரிவித்தது. 
இலங்கை இனப்பிரச்சினை முடிந்து விட்டது. இனிமேல் துப்பாக்கி சூடு நடக்காது என இலங்கை அரசு தெரிவித்ததன் பேரில் இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர முடிவு எடுக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் தற்போது வரை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கியால் சுடுவதும் என தொடர்ந்து அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பாதுகாப்பு இல்லாத நிலை...
தற்போது நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை மத்திய அரசு காப்பாற்றுமா? என்கிற அச்சம் மீனவர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தை மத்திய, மாநில அரசுகள் போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்