புதிதாக 2 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை

நீலகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் புதிதாக 2 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

Update: 2021-08-02 17:06 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் புதிதாக 2 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

கட்டணம் செலுத்த...

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 414 பள்ளிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டை போல் நடப்பாண்டிலும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, வீட்டில் இருந்தபடி பாடங்களை படிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் ஊரடங்கால் பலர் வேலையிழந்து வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகினர். இதை தொடர்ந்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

நீலகிரியில் சில அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக்கல்வி, யோகா, கராத்தே, போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று பாடங்களை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் கூறியதாவது:-

மொத்தம் உள்ள 414 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 33 ஆயிரம் பேர் படித்து வந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 2 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இதன் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.

நலத்திட்டங்கள்

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி போன்ற நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்புக்கு மத்தியிலும் வீடுகளில் இருந்தபடியே கல்வி தொலைக்காட்சி அல்லது கல்வி வானொலி மூலம் மாணவர்கள் பாடங்களை படிக்கிறார்களா? என்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 

வாட்ஸ்-அப் குழு மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்