சாலையோர மரத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர் சாலையோரமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2021-08-02 17:00 GMT
கோவை

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர் சாலையோர மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூக்கில் தொங்கிய நிலையில் பிணம் 

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு காளிங்கராயன் வீதியில் உள்ள 8-ம் நம்பர் காய்கறி மார்க்கெட் உள்ளது. இதன் எதிரே சாலையோரம் உள்ள ஒரு மரத்தில்  40 வயதான நபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் காக்கி நிற சீருடையும் அணிந்திருந்தார். 

இதை அங்கு நடைபயிற்சி சென்ற சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

ஆட்டோ டிரைவர் 

பின்னர் அங்கு தூக்கில் தொங்கியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப் பட்டது. 

அதில் பிணமாக கிடந்தவர் கோவை காந்திபுரம் 100 அடி ரோடு 2-வது வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 47) என்பதும், ஆட்டோ டிரைவரான இவர் கடன் தொல்லை காரணமாக அங்கு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. 

மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கடன் தொல்லை

தற்கொலை செய்துகொண்ட ஆனந்தகுமாருக்கு யசோதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் கல்லூரியிலும், மகள் பள்ளியிலும் படித்து வருகின்றனர். 

ஆனந்தகுமார் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நகைகளையும் அடகு வைத்து உள்ளார். 
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

 இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் ஆனந்தகுமாரிடம் கடன் தொகையை கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளனர். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து உள்ளார். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்