முருகன் கோவில்களில் களையிழந்த ஆடிக்கிருத்திகை விழா

கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட தால் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா, களை இழந்தது. இதனால் கோவில் வாசல்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-08-02 16:56 GMT
வடவள்ளி

கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட தால் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா, களை இழந்தது. இதனால் கோவில் வாசல்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை 

ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் விழாக்கள் கொண்டாடப்படும். இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று மீண்டும் பரவ வாய்ப்பு உள்ளது. 

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களில் கடந்த 1-ந் தேதி முதல் புதன்கிழமை வரை மற்றும் 8-ந் தேதியும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். 

களை இழந்த ஆடிக்கிருத்திகை 

இந்த நிலையில் ஆடிக்கிருத்திகை என்பதால் மருதமலை முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப் பட்டது. கோ பூஜையை தொடர்ந்து மூலவருக்கு பால், பன்னீர், ஜவ்வாது உள்பட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

இதையடுத்து மூலவர் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்ததை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. 

இதில் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தார். பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ஆடிக் கிருத்திகை விழா, களை இழந்து காணப்பட்டது. 

சூடம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு 

இதைத் தொடர்ந்து மருதமலை வந்த பக்தர்கள் அடிவாரத்தில் படிக்கட்டு தொடங்கும் கேட்டில் வைத்து தேங்காய், பழம் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். 

சிலர் அங்கு பூட்டப்பட்டு இருந்த கேட்டில் மாலை அணிவித்தனர். 
இதேபோல் சுக்ரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவில், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

மேலும் செய்திகள்