கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வது பற்றி செவிலியர்கள் செயல்விளக்கம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வது பற்றி செவிலியர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இதில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பங்கேற்றார்.
கடலூர்,
கொரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கடலூர் பாரதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தொற்று கிருமிகள் நீங்கும் வகையில் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்யும் வழிமுறைகள் குறித்து பயிற்சி செவிலியர்கள் செயல்விளக்கம் அளித்தனர். தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் செவிலியர்கள், வர்த்தகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.
பரிசோதனை
அதையடுத்து கலெக்டர் பேசுகையில், நாம் கொரோனா தொற்றில் இருந்து நம்மை காத்து கொள்ள இந்த கை கழுவும் பழக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் தங்களை சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி அளித்து, தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தி பரிசோதனை செய்த பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல், வர்த்தக சங்க பிரதிநிதிகள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.