சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு விவசாயி தீக்குளிக்க முயற்சி விழுப்புரத்தில் பரபரப்பு
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி தாலுகா திருவாமாத்தூரை சேர்ந்த மாரிமுத்து (வயது 75) என்ற விவசாயி, தனது மனைவி தெய்வானை, மகன்கள் முருகன், தனசேகரன், முருகன் மனைவி பழனியம்மாள், இவர்களுடைய மகள்கள் தானியலட்சுமி, கீர்த்திகா, மகன் சபரிநாதன், தனசேகரன் மனைவி விஜயசாந்தி, இவரது மகன் சுடரொளி ஆகியோருடன் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அவர்கள் 10 பேரும் திடீரென மண்எண்ணெய் கேனை எடுத்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். உடன் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், மாரிமுத்து போலீசாரிடம் கூறியதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்
எங்களது வீட்டுமனையை அளவீடு செய்து, வீடுகட்ட முயன்றோம். அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி, இங்கிருக்கும் எனது இடத்தை அளந்தால்தான் வீடு கட்ட விடுவேன் என்றார்.
சம்பவத்தன்று அளந்து, வீடு கட்டும் பணியை தொடங்க முயன்ற போது, வேலுமணியின் குடும்பத்தினர் எங்களை தடுத்து மிரட்டினர். மேலும் எங்கள் குடும்பத்தினரையும், கட்டிட வேலைக்கு வந்தவர்களையும் வேலுமணி குடும்பத்தினர் உருட்டுக்கட்டையால் தாக்கினர்.
எனவே வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சொந்தமான இடத்தில் நாங்கள் வீடு கட்டி வசிப்பதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதற்கிடையே மாரிமுத்து குடும்பத்தினரை சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணியின் குடும்பத்தினர் தடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவும் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்
இதேபோல், விழுப்புரம் அருகே ஆலாத்தூரை சேர்ந்த பரமசிவம் (48) என்பவர் தனது தாய் சடச்சி, மனைவி இந்திராணி, மகன் மகாராஜா ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றார்.
அவர்களிடம் விசாரித்த போது, பரமசிவம் கூறுகையில், நான் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் ஆலாத்தூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறேன்.
என்னை 2014-ல் வேலை நீக்கம் செய்தனர். அதன் பிறகு கடலூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து மீண்டும் 29.2.2019 அன்று பணியில் சேர்ந்தேன். ஆனால் எனக்கு அரசால் வழங்கப்பட்ட போனஸ், பணி உபகரணங்கள், சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.