ஆரோவில் அருகே அரசு ஊழியரின் காரை எரித்த வழக்கில் 2 பேர் கைது
ஆரோவில் அருகே அரசு ஊழியரின் காரை எரித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 47). இவர் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் நாவற்குளத்தை சேர்ந்த ரவுடியான வெங்கடேசன் மகன் டாம் மணி என்கிற மணிகண்டன் (19) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி குணசேகரின் வீட்டிற்கு டாம் மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் சென்று வீட்டின் எதிரே நிறுத்தி வைத்திருந்த குணசேகரின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர்.
இதுகுறித்து குணசேகர், ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாம் மணி உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த சூழலில் நாவற்குளம் பகுதியில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற டாம் மணி மற்றும் அவரது கூட்டாளியான கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்த வடிவேல் மகன் வசிகர் (19) ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.