கட்டண உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
பவர் டேபிள் உரிமையாளர்கள் மற்றும் சைமா சங்கத்தின் கட்டண உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் பனியன் ஒரு டஜன் ஆடைகளுக்கு ரூ.6 உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.;
திருப்பூர்
பவர் டேபிள் உரிமையாளர்கள் மற்றும் சைமா சங்கத்தின் கட்டண உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் பனியன் ஒரு டஜன் ஆடைகளுக்கு ரூ.6 உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவர் டேபிள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பவர் டேபிள் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சைமா சங்கத்துடன் போட்ட தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம், முடிந்து 9 மாதம் ஆகிறது. இதனால் சம்பள உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சைமா சங்கம் அழைக்க வேண்டும், மூலப்பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால் கட்டண உயர்வு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன்பாடு
இதற்கிடையே நேற்று சைமா சங்க அலுவலகத்தில் பவர் டேபிள் உரிமையாளர்கள் மற்றும் சைமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சைமா சங்க தலைவர் வைக்கிங் ஏ.சி. ஈஸ்வரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எம்பெரர் பொன்னுச்சாமி, துணைத்தலைவர் கோவிந்தப்பன் மற்றும் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், துணைச்செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கட்டண உயர்வு மற்றும் சம்பள ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் பவர் டேபிள் உரிமையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, போக்குவரத்து செலவு, நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் பவர் டேபிள் உரிமையாளர்களுக்கு ஒரு டஜன் ஆடைகளுக்கு 12 பீஸ் கட்டணம் ரூ.6 தற்காலிகமாக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுபோல் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து நாளை புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், தற்போது வழங்கப்படும் கட்டண உயர்வு புதிய ஒப்பந்தம் போடவும் தொகையில் இருந்து கழித்துக்கொள்ளப்படும் என்று உடன்பாடு செய்யப்பட்டது.
-