கூடலூரில் ஆட்டோவில் கஞ்கா கடத்திய பெண்கள் உள்பட 4 பேர் கைது

கூடலூரில் ஆட்டோவில் கஞ்கா கடத்திய பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-02 16:01 GMT
கூடலூர்:
கூடலூர் எள்ளுக்காட்டுப்பாறை பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் நேற்று லோயர்கேம்ப்-காஞ்சிமரத்துறை சாலையில் உள்ள கீழ்கண்ணகி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில், அந்த ஆட்டோவில் கொண்டு வந்த சாக்குபையில் 12 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
இதில் அவர்கள் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த சுகப்பிரியா (வயது 35), குபேந்திரன் (48), மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி (44), கூடலூர் 7-வது வார்டு பகுதியை சேர்ந்த சிவகாமன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்