வண்டலூர் தாலுகாவில் 5 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் இருக்கும் பொதுமக்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா காரணைப்புதுச்சேரி கிராமம் கோகுலம் காலனியில் 750-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 400 வீடுகளுக்கு மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்பட வில்லை.
இதனால அவர்கள் இரவு நேரங்களில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்காக மாணவ-மாணவிகள் செல்போனில் சார்ஜ் ஏற்றுவதற்காக மின் இணைப்பு உள்ள வீடுகளில் காத்திருக்கும் நிலை உள்ளது. பல மாணவ- மாணவி்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலையும் உள்ளது.மின் இணைப்பு வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்பட பல அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.அதேபோல வண்டலூர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக மின் இணைப்பு பெறமுடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தி குடியிருக்கும் குடும்பத்தினருக்கு பட்டா இல்லாத காரணத்தால் வண்டலூர் தாலுகாவிலுள்ள கோகுலம் காலனி உள்பட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் இணைப்பு வழங்குவதற்கு ஆணையிட்டால் உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.