சேலம் மாவட்டத்தில் தொற்றுக்கு 4 பேர் பலி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது

சேலம் மாவட்டத்தில் நோய் தொற்றுக்கு நேற்று 4 பேர் பலியாகினர். அதேசமயம், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Update: 2021-08-01 21:33 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நோய் தொற்றுக்கு நேற்று 4 பேர் பலியாகினர். அதேசமயம், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று கூடுதலாக 6 பேர் என மொத்தம் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 20 பேர், எடப்பாடியில் 6 பேர், கொளத்தூரில் 4 பேர், மகுடஞ்சாவடியில் 2 பேர், மேச்சேரியில் 3 பேர், நங்கவள்ளியில் 7 பேர், ஓமலூரில் 5 பேர், சேலம் ஒன்றியம், தாரமங்கலம், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும், சங்ககிரியில் 2 பேர், வீரபாண்டியில் 8 பேர், ஆத்தூர், அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, மேட்டூர் நகராட்சியில் ஆகிய பகுதிகளில் தலா 2 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,094 பேருக்கு சிகிச்சை
இதேபோல், சேலம் மாவட்டத்திற்கு கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 3 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 4 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 2 பேர், ஈரோட்டில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 79 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 121 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 1,094 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 பேர் பலி
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால் இவர்கள் 4 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,558 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்