மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு-45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

Update: 2021-08-01 21:15 GMT
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
கால்வாய் பாசனம்
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந் தேதி கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கால்வாய் பாசனத்துக்கு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மின்விசை பொத்தானை அழுத்தி கால்வாய் பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
மதகுகள் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. தொடர்ந்து கலெக்டர் கார்மேகம், சதாசிவம் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பூக்களை தூவி காவிரி நீரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகமாக இருக்க வேண்டுமென வாழ்த்தி தண்ணீரில் நெல் மணிகளையும் தூவினர்.
கலெக்டர் பேட்டி
பின்னர் கலெக்டர் கார்மேகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் உத்தரவுபடி, மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக இன்று (அதாவது நேற்று) தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர், பாசன தேவையை பொறுத்து அதிகரித்தோ, குறைத்தோ தொடர்ந்து 137 நாட்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை வழங்கப்படும். தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்தின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு அளவில் மாற்றம் இருக்கும்.
சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 433 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 377 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 230 ஏக்கரும் என 45 ஆயிரத்து 10 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் கால்வாய் பாசனத்துக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்புக்கு முன்னதாக பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதன்மூலம் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்துக்கு முழுமையாக கிடைக்கும். விவசாயிகள் இந்த தண்ணீரை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
அதிகாரிகள்
நிகழ்ச்சியில் மேட்டூர் உதவி கலெக்டர் வீர்பிரதாப்சிங், பொதுப்பணித்துறை சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், மேட்டூர் தாசில்தார் சுமதி, பொதுப்பணித்துறையின் மேட்டூர் நிர்வாக பொறியாளர் தேவராஜன், கால்வாய் பாசன பிரிவு உதவி நிர்வாக பொறியாளர் சுப்பிரமணி, அணை பிரிவுஉதவி பொறியாளர் மதுசூதனன், கால்வாய் பாசன பிரிவு உதவி பொறியாளர் கணேசன், பா.ம.க. வக்கீல் சதாசிவம், பா.ம.க. நகர செயலாளர் சந்திரசேகர் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்