பெங்களூருவில் 63 ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை; 7 பேர் கைது

பெங்களூருவில் 63 ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-01 20:27 GMT
பெங்களூரு:
  
ரவுடிகள் வீடுகளில் சோதனை

  பெங்களூருவில் குற்ற சம்பவங்களும், ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக ஊரடங்குக்கு பின்பு ரவுடிகளின் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.

  இந்த நிலையில், பெங்களூரு மேற்கு மண்டலத்தில் உள்ள பேடராயனபுரா மற்றும் சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை போலீசார் சோதனை நடத்தினார்கள். ஒட்டு மொத்தமாக 63 ரவுடிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

7 பேர் கைது

  அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் தற்போது செய்யும் தொழில், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்களா?, பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 7 ரவுடிகளின் வீடுகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததுடன், அவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சாம்ராஜ்பேட்டை போலீசார் 2 ரவுடிகளையும், பேடராயனபுரா போலீசார் 5 ரவுடிகளையும் கைது செய்தார்கள்.

  அவர்கள் மீது சாம்ராஜ்பேட்டை, பேடராயனபுரா போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற ரவுடிகளிடம் குற்றச்சம்பவங்களில் ஈடுபட கூடாது என கூறி, அவர்களை துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்