மூதாட்டியை மயக்கி 6 பவுன் சங்கிலி அபேஸ்

மூதாட்டியை மயக்கி 6 பவுன் சங்கிலி அபேஸ் செய்யப்பட்டது

Update: 2021-08-01 20:25 GMT
ஆவூர்
விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள நரியப்பட்டி கிராமத்திற்கு நேற்று காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்குள்ள வீதியில் நின்று கொண்டு இங்கு யாருக்காவது சர்க்கரை நோய், குழந்தையின்மை உள்ளிட்ட கோளாறுகள் இருந்தால் நாட்டு மருந்து கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய அதே ஊரை சேர்ந்த பவுனம்மாள் (வயது 60) என்பவர் அந்த வாலிபர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தனக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் அதனால் காலில் வீக்கம் இருப்பதாகவும் அதை சரி செய்வதற்கு மருந்து கொடுக்குமாறும் கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர்கள் இந்த டானிக்கை குடித்தால் ஒரே நாளில் சர்க்கரை நோய் மற்றும் கால்வலி சரியாகிவிடும் என்று ஒரு திரவத்தை கொடுத்து குடிக்கச் செய்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் பவுனம்மாள் மயக்கமடைந்தார்.அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை 2 வாலிபர்களும் அபேஸ் செய்து கொண்டு அங்கிருந்து   தப்பி சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த பவுனம்மாள் தனது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசில்  புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்து விட்டு தப்பிச் சென்ற வாலிபர்களை வலைவீசி  தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்