ஓடும் பஸ்சில் பிரசவ வலி வந்ததால் கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் அனுமதித்த அரசு பஸ் டிரைவர்; பிறந்த குழந்தை இறந்த பரிதாபம்
விஜயாப்புராவில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி உண்டானது. அவரை, அரசு பஸ் டிரைவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். ஆனால் பிறந்த குழந்தை இறந்து விட்ட பரிதாபம் நடந்துள்ளது.;
பெங்களூரு:
கர்ப்பிணிக்கு பிரசவ வலி
விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியில் இருந்து விஜயாப்புரா டவுனுக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் டிரைவராக ராஜ்குமாரும், கண்டக்டராக அருண் நாயக் இருந்தனர். அந்த பஸ்சில் ஒரு கர்ப்பிணி உள்பட ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். விஜயாப்புரா அருகே தேவரஹிப்பரகி பகுதியில் அந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி உண்டானது. அவர் வலியால் துடிதுடித்தார். அந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணியுடன் உறவினர்கள் யாரும் இல்லை என்பது டிரைவர் ராஜ்குமாருக்கு தெரியவந்தது. பிரசவ வலியால் துடித்த அந்த கர்ப்பிணியை ராஜ்குமாரும், அருண் நாயக்கும் ஆம்புலன்சை எதிர்பார்க்காமல், பஸ்சிலேயே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதித்த...
உடனே அந்த பஸ்சில் இருந்த மற்ற பயணிகளை உடனடியாக கீழே இறக்கியதுடன், அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சில் விஜயாப்புரா டவுனுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தேவரஹிப்பரகியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார். பின்னர் கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் டிரைவர் ராஜ்குமாரும், கண்டக்டர் அருண் நாயக்கும் அனுமதித்தனர். அங்கு கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு பிறந்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்து விட்டது. அந்த கர்ப்பிணியை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதித்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக டாக்டர்கள் கூறினார்கள். பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை அரசு பஸ்சிலேயே அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்த டிரைவர் மற்றும் கண்டக்டரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.