கர்நாடகத்தில் தலித் ஒருவரை முதல்-மந்திரி ஆக்காதது ஏன்; காங்கிரசுக்கு, ஈசுவரப்பா கேள்வி
கர்நாடகத்தில் தலித் ஒருவரை முதல்-மந்திரி ஆக்காதது ஏன்? என்று காங்கிரசுக்கு முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கேள்வி எழுப்பினார்.
பெங்களூரு:
மந்திரி ஆக்கினோம்
பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதா தலித் ஒருவரை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று சித்தராமையா சொல்கிறார். கர்நாடகத்தில் எடியூரப்பா 4 முறை முதல்-மந்திரியாக இருந்தார். ஆனால் இதில் ஒரு முறை கூட பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆட்சி அமைக்க குழப்பங்களுடன் சிலரை மந்திரி ஆக்கினோம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை முறை தனிப்பெரும்பான்மை பலம் கிடைத்தது. அப்போது தலித் ஒருவரை முதல்-மந்திரி ஆக்காதது ஏன்?.
பிற்படுத்தப்பட்ட சமூகங்கள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கர்நாடக கவர்னர் கெலாட் ஆகியோரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். தலித் சமூகத்தினருக்கு பா.ஜனதா உயர்ந்த பதவிகளை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களை மேம்படுத்துவது போன்றவை காங்கிரஸ் தலைவர்களின் பேச்சில் மட்டுமே உள்ளது. செயல்பாடுகளில் ஒன்றும் இல்லை. வெறும் பேச்சில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை.
மத்திய மந்திரிசபையில் மொத்தம் உள்ள 81 பேரில் 45 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள். நாட்டில் முதல் முறையாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதை சித்தராமையா பாராட்ட வேண்டும்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.