வருகிற 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தாடி வைத்த நபர், கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்; பிரபல ஜோதிடர் கணிப்பு

வருகிற 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடகத்தில் தாடி வைத்த நபர் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று பிரபல ஜோதிடர் கணித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-01 20:11 GMT
பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

  கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக கடந்த 26-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அவரது நெருங்கிய ஆதரவாளரான பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

  அவர் பதவி ஏற்றும் 4 நாட்களே ஆகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் வருகிற 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இன்னொருவர் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என பிரபல ஜோதிடர் கணித்துள்ளார். இது பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

தாடி வைத்த நபர் பதவி ஏற்பார்

  அதாவது விஜயநகர் மாவட்டம் கூவினஅடஹள்ளி மயிலாரா கோவில் தர்மகர்த்தாவும், பிரபல ஜோதிடருமானவர் வெங்கப்பய்யா உடையார். இவர் தான் எதிர்கால கர்நாடக அரசியல் குறித்து கணித்துள்ளார்.

  அதாவது, கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பசவராஜ் பொம்மை 2 ஆண்டுகள் முழுமையாக பதவியில் நீடிக்கமாட்டார். அவர் 6-7 மாதங்கள் மட்டுமே முதல்-மந்திரியாக இருப்பார். அதன்பின்னர் மீண்டும் புதிய முதல்-மந்திரியாக ஒருவர் பதவி ஏற்பார். அந்த நபர் தாடிவைத்திருப்பார்.

கொரோனா 3-வது அலை

  அதுபோல் கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரசு 3-வது அலையை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தாடி வைத்த நபர் யார்?

ஜோதிடர் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு தாடி வைத்த நபர் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என கூறியிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அதாவது தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி தான் எப்போதும் தாடியுடன் இருப்பார். எனவே ஜோதிடர் கூறிய படி அவர் தான் அடுத்த முதல்-மந்திரியாக பதவி ஏற்கலாம் என தகவல்கள் உலா வருகின்றன. இது பா.ஜனதாவினர் மத்தியில் விவாதப்பொருளாக மாறிவிட்டது.

மேலும் செய்திகள்