35,500 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்கள்
கின்னஸ் சாதனை முயற்சியாக 66 நாட்களில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் விமானம், ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் 35 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம் செய்த இளைஞர்கள் ராமேசுவரம் வந்தனர்.;
ராமேசுவரம்,
கின்னஸ் சாதனை முயற்சியாக 66 நாட்களில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் விமானம், ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் 35 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம் செய்த இளைஞர்கள் ராமேசுவரம் வந்தனர்.
பொது போக்குவரத்து
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ெரயில் சுற்றுலா தொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும்் திலீபன் (வயது 29). இவரது நண்பர் புதுச் சேரியைச் சேர்ந்த ஆடம்சன்ராஜ் (26). இவர்கள் 2 பேரும் சுற்று லாவின் முக்கியத்துவம் குறித்தும், இந்தியாவில் பொது போக்குவரத்து மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், கடந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி அன்று புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பஸ் மூலம் பயணம் செய்துள்ளனர்.
அதன் பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் பஞ்சாப் அங்கு இருந்து காஷ்மீர், அசாம், திரிபுரா, மேகாலயா, கொல்கத்தா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அதன் பின்னர் திருவனந்தபுரம் வருகை தந்து அங்கிருந்து திருச்செந்தூர், மதுரை வந்து மீண்டும் விமானம் மூலம் கொச்சின் சென்றுள்ளனர்.
தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பகுதிகளுக்கும் விமானம், ெரயில், பஸ்கள் மூலம் பயணம் செய்த படி கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி தமிழ்நாட்டின் வேலூர் பகுதிக்கு வந்துள்ளனர்.
இந்த இளைஞர்கள் நேற்று காலை 9 மணி அளவில் ராமேசுவரம் வந்தனர்.
வரவேற்பு
கடந்த 66 நாட்களில் 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் உள்ள பல பகுதிகளுக்கும் கின்னஸ் சாதனை முயற்சியாக 8 முறை விமானத்திலும், 43 முறை ரெயில் பயணமும் 34 முறை பஸ் பயணமும் செய்து ராமேசுவரம் வந்த இவர்களை மாவட்ட சுற்றுலா அதிகாரி வெங்கடாசலம், சமூகநலத்துறை தாசில்தார் அப்துல் ஜபார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.