கோவில்களில் தரிசனத்துக்கு தடை; பக்தர்கள் ஏமாற்றம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.;

Update: 2021-08-01 19:44 GMT
அரியலூர்:

கூட்டம் கூடுவதை தடுக்க...
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை தடுக்க ஆடி கார்த்திகை, பதினெட்டாம் பெருக்கு ஆகியவற்றை முன்னிட்டு, நேற்று முதல் நாளை(செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதித்து கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். அதன்படி அரியலூர் நகரில் உள்ள முருகன் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில், மாரியம்மன் கோவில்கள், விநாயகர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில்களில் அர்ச்சகர்கள் வழக்கமான பூஜைகளை செய்தனர். பின்னர் கோவில்கள் மூடப்பட்டிருந்தன. மாவட்ட பகுதிகளில் உள்ள மற்ற கோவில்களிலும் இந்த நிலையே காணப்பட்டது. விசேஷ நாட்களில் கோவிலுக்கு செல்லலாம் என்று எண்ணியிருந்த பக்தர்கள், தடை அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர்.
பிரகதீஸ்வரர் கோவில்
இந்நிலையில் மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில நாட்களாக ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இந்நிலையில் கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து நேற்று அந்த கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கோவிலின் முன்புற கதவு மூடப்பட்டிருந்தது.
இதை அறியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், சாமி தரிசனம் செய்ய முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

மேலும் செய்திகள்