காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள்

காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள் என்று நாராயணசாமி கூறினார்.;

Update: 2021-08-01 19:11 GMT
அரியாங்குப்பம், ஆக.2-
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவில்  நிற்பார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
நினைவேந்தல் நிகழ்ச்சி
அரியாங்குப்பம் தொகுதி சுப்பையா நகரில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்தனர். மாநில அந்தஸ்து உடனே புதுச்சேரிக்கு கிடைத்து விடும், மூடிக்கிடக்கும் பஞ்சாலைகள் திறக்க நடவடிக்கை எடுப்பார்கள், மாநில கடன்களை தள்ளுபடி செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. தற்போது நடந்து வரும் ஆட்சியானது கோமா நிலையில் உள்ளது.
நடுத்தெருவில் நிற்பார்கள்
புதுச்சேரிக்கு புதிய சட்டமன்ற வளாகம் கட்டுவது முக்கியமில்லை. மக்கள் நலத்திட்டங்களை முதலில் கொண்டு வாருங்கள். கடந்த ஆட்சியின் போது   முதியோர்     உதவித் தொகையை உயர்த்தி வழங்க, 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு நிதி ஒதுக்க, சென்டாக் உதவித்தொகை வழங்க, பஞ்சாலைகளை திறக்க, மக்களுக்கு இலவச அரிசி வழங்க என பல்வேறு திட்டங்களுக்கு தடை விதித்து காங்கிரஸ் ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தினார்கள். 
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியவர்கள் காணாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியை சேர்ந்தவர், முன்னாள் சபாநாயகர், ஊசுடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் காணாமல் போய் விட்டார்கள். துரோகம் செய்தவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு தான் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என நினைத்தோம். ஆனால் சில மாதங்களிலே அதற்கான பலனை அனுபவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவில் தான் நிற்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர்     ஏ.வி.சுப்பிர மணியன், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் குருமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்