பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்கள்
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி காளிதாஸ் பள்ளி தெருவை சேர்ந்தவர் கமலம் (வயது55). இவர் வடை, போண்டா, பஜ்ஜி சுட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்ற போது அந்த வழியாக அசுர வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் கமலம் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துள்ளனர். இதில் கமலம் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அதோடு அவர் அணிந்திருந்த தங்க செயினும் அவர் கழுத்திலேயே மாட்டிக் கொண்டது. இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அந்த 2 வாலிபர்களும் தெருவுக்குள் சென்றுவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி பார்த்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்து செயினை பறிக்க முயன்ற வாலிபர்களின் படங்கள் பதிவாகியுள்ளது அதன் அடிப்படையில் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சி.சி.டி.வி.யில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.