மதுக்கடையில் திருடிய வாலிபர் கைது
ராமநாதபுரம் அருகே மதுக்கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே மதுக்கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புகார்
ராமநாதபுரத்தை அடுத்துள்ள பழங்குளம் அருகில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இந்த கடையில் கடந்த 29-ந் தேதி இரவு விற்பனை முடிந்து சென்ற சமயம் பார்த்து கடையை உடைத்து உள்ளே இருந்த ரொக்கம் ரூ.3 ஆயிரம் மற்றும் மதுபாட்டில்களை மர்ம நபர் திருடிச்சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மேற்பார்வையாளர் கவரங்குளத்தை சேர்ந்த முத்துமாரி அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக தீவிர குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே இதே போன்ற திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிந்தனர்.
இதன்படி போலீசார் தகவல் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப் படையில் மேற்கண்ட திருட்டில் ஈடுபட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் இந்திராநகரை சேர்ந்த பெரியண்ணன் மகன் மகேஷ் என்ற மகேஸ்வரன் (வயது36) என்பவர் என்பதை கண்டறிந்தனர். அவர்குறித்து விவரங்களை சேகரித்தபோது தூத்துக்குடி பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மகேஸ்வரனை மடக்கிபிடித்து கைது செய்தனர். மதுக்கடையில் திருடிய பணம் மற்றும் மதுபானங்களுடன் விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக பொழுதை கழித்து வந்துள்ளார்.
விசாரணை
இவர் மீது 12 திருட்டு வழக்குகள் உள்ளதும் கடைகளை உடைத்து திருடி கைதாகி சிறைக்கு செல்வதையும் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் மீண்டும் கைவரிசையை காட்டி திருட்டில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்ட சிறைப்பறவை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் திருப்பாலைக்குடி அருகே திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றவர் வெளியில் வந்த நிலையில் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மகேஸ்வரனிடம் இருந்து மதுபாட்டில்கள் சிலவற்றை போலீசார் பறிமுதல் செய்த போலீசார் வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.