ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நெமிலி
விழிப்புணர்வு ஊர்வலம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவுறையின்படி நெமிலி பேரூராட்சியில் கொரோனா 3-வது அலை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் சுமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் சுகாதார ஆய்வாளர் பூஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகர் சங்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் ஊர்வலமாக சென்று வீடுகள் மற்றும் கடைகளில் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். பஸ் நிலையத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தடுப்பூசி போடவேண்டியதன் அவசியத்தையும், சமூக இடைவெளி, முககவசம் மற்றும் சனிடைசர் கொண்டு கை கழுவுதல் ஆகியவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலம் கொரோனா 3-வது அலையிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கலவை
அதேபோன்று கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல் ஆகிய கிராமங்களிலும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலவை தாசில்தார் நடராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முக கவசம் அணிதல், சமூக விலகலை கடைப்பிடித்தல், கிருமி நாசினி பயன்படுத்துதல், அடிக்கடி கைகளை கழுவுதல், தடுப்பூசி போடுதல் போன்றவை குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மண்டல துணைத் தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் சுகுமார், ஸ்ரீதர், வினோத்ராணி, விஜயகுமாரி, சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இளங்கோ முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு குறித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டு, பஸ் நிலையம், பஜார் வீதி, வணிக நிறுவனங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு
ஆற்காட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை் ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் ஆற்காடு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவனபாபு, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
தக்கோலம்
தக்கோலம் பேரூராட்சியில் நேற்று செயல் அலுவலர் கணேசன் தலைமையில் விழிப்புனர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது பொது மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ஊர்வலத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.