ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா 20 கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்

நாகலூர் பெரிய ஏரியில் ஊரடங்கை மீறி நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 20 கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்;

Update: 2021-08-01 17:37 GMT
கண்டாச்சிமங்கலம்

போலீஸ் எச்சரிக்கை 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே நாகலூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மீன்பிடிக்க திரண்டனர். 
இதையறிந்து வந்த போலீசார், கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரும் ஏரியில் மீன்பிடிக்க கூடாது என்று எச்சரித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். 

மீன்பிடி திருவிழா 

இந்த நிலையில் ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று வேளாக்குறிச்சி, வரஞ்சரம், கண்டாச்சிமங்கலம், நாகலூர், பொரசக்குறிச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கையில் மீன்பிடி வலை, சாக்குப்பை மற்றும் மீன் கூடையுடன் நாகலூர் பெரிய ஏரியில் மீன்பிடிக்க திரண்டனர். 
இதுபற்றி தகவல் அறிந்ததும் வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் 2 போலீஸ்காரர்கள் மட்டுமே வந்தனர். போலீசாரை கண்டதும் கரையில் நினறு கொண்டிருந்தவர்கள் ஏரியில் இறங்கி மீன் பிடிக்கத் தொடங்கினர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர்.

போட்டி போட்டு பிடித்தனர்

ஏரியில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதனால் நாகலூர் பெரிய ஏரி விழாக்கோலம் பூண்டது. பின்னர் பிடித்த மீன்களை சாக்குப்பை மற்றும் பாத்திரங்களில் வைத்து எடுத்து சென்றனர். 
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்தது. கெண்டை மீன் குறைந்தபட்சம் ஒரு கிலோவும், அதிகபட்சமாக 4 கிலோ எடை வரையிலும் இருந்தது. இந்த மீன்பிடி திருவிழாவில் 3 ஆயிரம் கிலோவுக்கு மேல் மீன்கள் பிடிபட்டு இருக்கலாம் என்றனர். 
சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் ஒரே நேரத்தில் 600-க்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி மீன் பிடித்த சம்பவம் நாகலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்