கோட்டூர் பகுதியில், தண்ணீரின்றி கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்றக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோட்டூர் பகுதியில் தண்ணீரின்றி கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்றக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்:-
கோட்டூர் பகுதியில் தண்ணீரின்றி கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்றக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கிடைக்கவில்லை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சிங்கமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு மூலம் 350 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பயிர் செய்து 30 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
தண்ணீரின்றி வயல் வெளி வறண்டு கிடப்பதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். தண்ணீர் இல்லாததால் உரம் போடவோ, களை எடுக்கவோ முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இன்னும் சில நாட்களுக்குள் தண்ணீர் இல்லை என்றால் பயிர்கள் முற்றிலும் கருகி விடும் அபாயம் உள்ளது. எனவே கோரையாற்றில் இருந்து சிங்கமங்கலம், நெய்க்குண்ணம் வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு, கருகி வரும் பயிர்களை காப்பாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வளர்ச்சி குன்றியது
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சிங்கமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பல்வேறு சிரமங்களுக்கு இடையே குறுவை சாகுபடியை தொடங்கியுள்ளோம். விதைப்புசெய்து 30 நாள் வயதாகிறது. தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து பயிர்கள் காய்ந்து வருகிறது. களை எடுக்கவும், உரம் போடவும் முடியாமல் பயிரின் வளர்ச்சி குன்றி உள்ளது. இதனால் பெருமளவில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே தேவையான தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும்’ என்றனர்.