ஆடிபெருக்கையொட்டி ஆழியாறு அணை பூங்கா நாளை மூடப்படுகிறது
ஆடிபெருக்கையொட்டி ஆழியாறு அணை பூங்கா நாளை மூடப்படுகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள இயற்கை எழில்மிகுந்த ஆழியாறு அணை பூங்காவிற்கு உள்ளூர் மட்டுமின்றி வௌியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக விஷேச நாட்கள் மற்றும் சனி, ஞாயிறுக்கிழமை, அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆடிப்பெருக்கு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை), ஆழியாறு பூங்கா மூடப்படுகிறது.
இதனால் அணை மற்றும் பூங்காவிற்கு யாரும் வரவேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஆழியாறு ஏராளமான சுற்றுலா பயணிகள் பள்ளி விளங்கால் தடுப்பணையில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.
இதையறிந்து அங்கு வந்த ஆழியாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கத்துரை, செம்மணன் ஆகியோர் சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பினர். மேலும் நாளை தடையை மீறி ஆழியாறு அணை, பூங்காவிற்கு யாரும் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.