திண்டிவனம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
திண்டிவனம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம்,
திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் மகன் ராஜாராம் (வயது 36). நெல் அறுவடை எந்திரம் டிரைவர். இவரது மனைவி உமா (30). திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு காமேஷ் (3) என்ற குழந்தை உள்ளது. இவர்கள், வெள்ளிமேடுப்பேட்டை மேட்டுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
ராஜாராமுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் பின்னர் அவர், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பல இடங்களில் சிகிச்சைபெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வெள்ளிமேடுப்பேட்டையில் உள்ள காலிமனையில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.