இஞ்சி செடிகளை தாக்கிய வேர் அழுகல் நோய்
கூடலூர், முதுமலையில் இஞ்சி செடிகளை வேர் அழுகல் நோய் தாக்கி உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
கூடலூர்
கூடலூர், முதுமலையில் இஞ்சி செடிகளை வேர் அழுகல் நோய் தாக்கி உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இஞ்சி சாகுபடி
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பச்சை தேயிலைக்கு இணையாக குறுமிளகு, கிராம்பு, ஏலக்காய், காபி, இஞ்சி உள்ளிட்ட பணப்பயிர்களும் விளைகிறது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மே மாத இறுதியில் இஞ்சி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். நடப்பாண்டில் சரியான நேரத்தில் பருவமழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
இதற்கு ஏற்ப விவசாய பணிகளையும் தொடங்கினர். ஆனால் பருவமழை தாமதமாக பெய்து வருகிறது. அதாவது காலம் தவறி 2 வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதில் இஞ்சி செடிகள் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது.
வேர் அழுகல் நோய்
முதுமலை ஊராட்சி நாகம்பள்ளி, ங்கணகொல்லி, நம்பிக்குன்னு உள்பட பல்வேறு இடங்களில் ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ள இஞ்சி செடிகள் வேர் அழுகல் நோயால் மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளது.
இதேபோல் கூடலூர் பகுதியில் புத்தூர் வயல், ஏச்சம்வயல், பாடந்தொரை உள்பட பல்வேறு இடங்களில் இஞ்சி செடிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விளைச்சல் குறையும் என்று விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விளைச்சல் குறையும்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் பருவமழை தொடங்கி விடும். இதை கருத்தில் கொண்டு விதை இஞ்சிகளை தோட்டங்களில் பயிரிட்டு பராமரிக்கும் பணி நடைபெறும்.
நடப்பாண்டில் சரியான நேரத்தில் பருவமழை தொடங்கவில்லை.
தாமதமாக பலத்த மழை பெய்ததால் இஞ்சி செடிகளை வேர் அழுகல் நோய் பரவலாக தாக்கியுள்ளது. இதனால் விளைச்சல் குறையும் நிலை உள்ளது. தற்போது மழையும் சற்று குறைந்துள்ளதால் நோயின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.